அன்புடன் வரவேற்கிறேன்

நண்பர்களே ! உங்கள் அனைவருக்கும் வணக்கம். என் கவிதைகள் உங்களின் வாசிப்பிற்கு தவம் இருக்கின்றன. ஆம் நீங்கள் வாசிக்கத் துவங்கினால் என் கவிதைகள் சுவாசிக்கத் துவங்கும்... நன்றி...

31 August, 2012

களவாடிய கவிதைகள்

இதயத்திலிருந்து
இதயத்திற்க்காக !

இமயமலை அடிவாரத்தில்
அதன் இருப்பிடமது...

இலக்கணத்தோடு
காதலின் இலக்கணத்தோடு
இதயத்தில் இடம் கொண்ட இதயமது...!

நாளங்கள்
இரத்த நாளங்கள்
நாணம் கொள்ளும்
இவளால் ஆன கவிதைகளால்..!

துடிப்பும்
இதய துடிப்பும்
உயிர் பெறும்
இவளால் ஆன கவிதைகளால்..!

விழிகளும்
மௌன விழிகளும்
இரவினில் முகாமிடும்
இவளால் ஆன கவிதைகளால்..!

அறைகளும்
இதயத்தின் அறைகளும்
இடம் மாறும்
இவளால் ஆன கவிதைகளால்..!

கோபமும்
என் மீதுள்ள கோபமும்
கானல் நீராய் போகும்
இவள் மீது
இவளின் மீது
நான் கொண்ட என் இந்த கவிதையினால்.....


30 August, 2012

நிழலா! நிஜமா!

நிழலா; நிஜமா
பொய்யோ; மெய்யோ

என் மெய் உயிர் தீண்டியவள்
விழிகளின் மொழிகளினால் !

காதல் இப்படித்தானோ !

கானல் நீரில்
தாகம் தணியவில்லை
நானல் கொண்டு
நாவின் நலம் பேணினாய் !

உயிர் தந்தவர்கள்
உன்னை உருக
உள்ளத்தில் ஊற்றி
மாலை வேளையில்
மணி ஓசை தீபம் ஏற்றி
அன்னமிட
அடுக்களையில் அமர்ந்து
அடுக்கடுக்கான
கற்பனைகளோடு

உம்!
வார்த்தையொன்று வந்தால்
வரிந்துகட்டி வாழ்க்கைப்பாடம்
வழக்கில்லாமல் வாய் நிறைய
வாழ்த்துக்களோடு !

இருந்தும் என் நிழல் இன்னும்
உன் நிஜத்தினை மெய்யென்று
எண்ண என்னை மடகு போட்டு
மனதின் ஓரம் மல்லுக்கட்டி
மாதக்கணக்காய் மருவுகிறது !

உன்னோடே கேட்கிறேன்
நீ...
நிஜமா...
நிழலா..!

29 August, 2012

வாழ்க்கை

மிகை குறியிட்டு
முடிக்கும் கேள்வி
வாழ்க்கை !

உயிர் தங்கி இருக்கும் உடல்
எத்தனையோ எண்ணங்கள்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
நினைவுகள் மட்டும் எஞ்சி !

“நல்லதே செய்
நல்லதே நினை”
சாதரணமாக வாழலாம்
ஆனால்...
ஆடி அடங்கி
சொந்தங்கள் விழிநோக்கி இருக்க
விடை பெறுகிறோம் !
இடையிலே...
குழந்தை குடும்பம் சமூகமென்று
நாகரீக வழி தொடர்ந்து
நற்பெயர்க்கு முற்படுவதே
வாழ்க்கையா..!

ஏதோ ஒன்று இருக்க அறியாமலே
அடங்கிவிடுகிறது கூடு !

தெரியாமலே நகர்கிறது வாழ்க்கை!

சாதாரண நிகழ்வின்றி
ஜென்மத்தின் வாய்ப்பன்றோ !
நொடிகள் தடையில்லாது
இடைவிடாது சிந்தித்தால்
நிகழ்கால அவசியம் என்றறிந்தது
எதிர்காலத்தில் வெறுமனே தோன்றும்
நிரந்தரமேது நமக்கு !

மூச்சின் எண்ணங்கள்
பெரியதென்று பொருள் உணர்த்துகிறதா !
எத்தனை கோபமும் வெறுப்பும் காழ்புணர்வும்
அதை ஒத்தே சக்தி விரயம்
நாள்காட்டி சுட்டி காட்டிய குறிப்பு
“அவசரப்படுவது ஈக்களை
அடிக்க அனுமதித்தெடுமன்று”

மனம் பெறும் மகிழ்ச்சி
மாசடைந்துவிட்டது
முயற்சிகள் தினமும்
முயற்சிக்க முற்ப்படுவதே இல்லை

முகமூடி களைந்து
ஆசுவாசப்படுத்திக்கொள்
குன்றின் மீதேறிப்பார்
குளமும் குட்டையாகும்
குறிப்புகள் எடுத்துக்கொள்
அடிவாரம் அடைந்தவுடன்
பாதையை பக்குவப்படுத்து
வாழ்ந்திட வாழ்க்கையை
வாழ்த்திட வாழ்க்கையில்
வளமும் நலமாய் வந்து சேரும்..!


28 August, 2012

என் அவள் ! என்ன அவள் ! என்னவள் !

வாட்டிய வெயிலுக்கு பின்
தென்றலின் உச்சமாய் வீசிய
மழைத்துளியின் சில துளிகள்....

அவள்...
அவளா...
அவளால்...!

மையல் விழிகளில்
மையிட்டுருப்பாளோ !

சுருள் முடியின்
சுற்றளவு சொல்வாளோ !

நொடிகளில் லட்சம் மொழிகள்
விழிகளில் சொல்வாளோ !

அனைத்துவகை பூக்களின் மாநாட்டில்
தேசிய மலராக அறிவிக்கப்பட்டவளோ !

புத்தகத்தின் மத்தியபிரதேசத்தில்
அரிசி போட்டு மயில்தோகை வளர்பவளோ !

பௌர்ணமி நிலவையும்
வெட்கம் கொள்ள செய்பவளோ !

நடைவண்டி ஓட்டிருப்பாளா !

கண்ணாடி வளையல் மீது
கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருபவளோ !

இடது கை பழக்கம் கொண்டவளோ !

நாடி துடிப்பில்
நாட்டின் மீது பற்று கொண்டவளோ !

படிப்பில்
பட்டம் பெற்றிருப்பாளோ !

பூவானவல்
பூச்செடிகளை வளர்பவளோ !

விழியில்
புன்னகை செய்பவளோ !

மொழிகள்
நூறு கற்றவளோ !

அன்பின்
இலக்கண மொழியாளோ !

பாட்டி மருத்துவம் படித்தவளோ !

ஆவி பறக்க
அசைவம் உண்பவளோ !

விழிகளில்
தூறல் செய்பவளோ !

வெள்ளி செவ்வாய்
கோவில் செல்பவளோ !
ஆடு மாடு கோழி கூட
அரவணைத்து நடப்பவளோ !

கோபத்தில்
கொள்ளை பிரியம் கொண்டவளோ !

மருமகள்
மகளாக வருவாளோ !

தலைகோதி
தாலாட்டு சொல்வாளோ !

மடி சாய்த்து மனதின்
மலைபாரம் குறைப்பவளோ !

அரும்பிய மீசையினால்
ஆன்மாவை ஆள்பவளோ !

பாவையினர் பூச்சூடும்போது
என்னை அள்ளி சூடுபவளோ !

மொட்டை மாடியில் கூழ்வடகம்
குனிந்து ஊற்றுபவளோ !

அதிசயமாகி போன
அடுக்களை சமையல் செய்பவளோ !

அதிகாலை சூரியனுக்கு
காட்சி தருபவளோ !

அச்சத்தில்
அத்தானை கட்டிக் கொள்பவளோ !

சந்தேகத்தை
சாக்கு பையில் கசக்கி இட்டவளோ !

வாசல் வந்து விழியால் செய்தி சொல்லி
வழியனுப்புவாளோ !

என் தோள் சாய்ந்து
சொர்க்கம் காண்பாளோ !

காக்கைக்கும்
கல்லில்லா சோறு படைப்பாளோ !

மல்லிகைக்கும் மஞ்சளுக்கும்
சொந்தகாரி இவள்தானோ !

பைங்கிளி தமிழில்
என் கவிக்கு உயிர் தருபவளோ !

அன்னப்பறவை அசந்து போக
குழந்தைக்கு பால் தருபவளோ !

மொத்தத்தில் சத்தமில்லா
ஒரு முத்தத்தில்
என் இதயம் வந்தடைவாளோ !

மழை நின்றது !

27 August, 2012

வெட்கத்தில் சூரியன்!

அதிகாலைச் சூரியனும்
அழகு சாதனங்களுக்கு அடிமையாகிவிட்டான்
நீ
கோலமிடும் நேரத்திற்க்காக..!

26 August, 2012

காதலின் அவா!

இமைகள் மூடி
திறக்க மறக்கும் நாள் வரை
காதலை
காதலித்துக் கொண்டே இருக்க வேண்டும்!

25 August, 2012

மலரின் பாத யாத்திரை

என்னை போலவே
என் வீட்டு மாடிபடியும்
மயங்கி நிக்குதடி
மலரின் பாத யாத்திரைக்கு பின்..!

24 August, 2012

மறுமடியும் வேண்டாம்... மறுமடலும் வேண்டாம்....

கடந்தகாலம் காப்பீடு செய்யவில்லை
கவிதைகளாவது காப்பீடு செய்கிறேன்
உன் இதயத்தில் !

கண்களோடு கவி தொடங்கினேன்
காதலால், காதலில் அல்ல!

என் தமிழ் கவி உலகம்
தற்காலிகமான பதவி தந்துள்ளது
உனக்கு
விருப்பமா… நிரந்திரமாக !
நித்திரையில்லை நிஜமாக
நீலக்கடல் தாண்டியும் நித்தம் வந்து
தினக்கூலி கேட்கிறாள்
என் இதயம் தந்தும்!

இதயம் தொலைத்த என்னோடு
இன்பத்திற்க்கு ஏங்குவது
வேண்டாம் பெண்ணே
மறுபடியும் வேண்டாம்!
மறுமடலும் வேண்டாம்!

23 August, 2012

பிப்ரவரி 14 பிறந்தாள் எனக்கென்ன...!

விடி வெள்ளி கண்ட நாட்கள் கடந்து
விடிந்ததும் விடியாததுமாய்
வெள்ளித்திரை காண ஓர் இளைஞர் பட்டாளம் !

பால் கொள்முதல் விலையேற்ற போராட்டம்
ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம்
என் நாயகனுக்கு இன்னொரு பட்டாளம்!

தண்ணீர் விலை மிஞ்சியது
தங்கத்தை!

வெண்பொங்கல் உண்டு பெருங்குறட்டை
நடுசாமத்தில் நாலாயிரம் கனவுகளாம்
பொருளாதாரம் உயர்த்த அல்ல
அவளுடைய பிறந்தநாள் பரிசு என்னவென்று!

கலப்பை தூக்கி உழ சொல்லவில்லை
உழவும் தயாரில்லை!

தினம் நூறு ரோஜாக்கள் பரிசளிக்கிறாய்
ஒரு வேளை உணவு இல்லை
இன்னும் ஆயிரம் ஆயிரம் பேருக்கு!

உன்னை குற்றம் சொல்லவில்லை
இல்லை இல்லை
உன்னையும் குற்றம் சொல்லவில்லை!

கையூட்டு தொழில் தர்மம் என்றாகிவிட்டது
நூறு லட்சமானது...இன்றோ
லட்சத்தில் கோடியானது !

நான் என்ன செய்ய முடியும் என்று கேட்காதே
ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு வழி பாதையில்
நூறு பேர் நின்று நானென்று ஒலித்தால்
நாமென்று ஒலிக்கும்
அகற்றப்படும் ஆக்கிரமிப்புகள் மட்டுமல்ல

ஒரு வேளை சோற்றுக்கு கூட
வழியில்லாத ஒரு மனிதன் இருக்கும் வரையில்
பிப்ரவரி 14 பிறந்தாள் எனக்கென்ன!

தினம் தினம் உரைத்துப் பார்
உனக்குள்ளும்...
நமக்கென என்றுணர்ந்தால்
நாளை பிறக்கும் நீ எதிர்நோக்கும்
பிப்ரவரி 14......!

22 August, 2012

அம்மா!

என் தமிழ் கொண்ட
அர்த்தமுள்ள ஒரு வரி கவிதை!

ஈசனும்
ஈரேழு பிறவி வேண்டுமென்பான்
ஈன்றது என் தாயாய் இருந்தால்!

ஒவ்வொரு இரவும் ஆராரோ
ஓயாமல் ஒலிக்கிறது
தாயவள் தாலாட்டியது!

தேசம் தொலைத்து
ஆயிரம் நாட்கள் அந்திசாய்ந்து விட்டது
அரபிகடலோடு!
இன்றும் தூங்காமல் ஏங்குகிறேன்
அன்னை மடிக்காக!

காதலிலும் கள்ளம் வந்தது இன்று
அன்னையின் அன்பை தவிர!

வெற்றியின் தொடர்புள்ளி
தாயே நீ மட்டும்தான்!

நிலவையும் நித்திரையின்றி
ஏங்க வைக்கும் ; நிலாச்சோறு

விரல் பிடித்து நடந்த வீதியிலே
மண் தரை மாறியேபோனது
கல் மணல் கலவை கொண்டு
கான்கிரீட்டாக!
வெற்றிக்கு வழிகாட்டும்
விரல் பிடித்து நடக்க
மறந்ததில்லை இப்போதும்!
எப்போதும்!

பக்கத்து தெருவரை
பதம் பார்த்திருக்கிறது
அடுப்பில் இட்ட மிளகாய் வத்தல்
சுற்றிப்போட்டது எனக்கு!

அன்னையளித்த ஆதி மொழி
அன்பதனை அடுக்கடுக்காக
தொடுக்க கற்றுக்கொள்
எதிர்நோக்காமல் எள்ளளவும்!

ஹிட்லரும்
அன்னை மடிக்காக ஏங்கியவன் தான்
அன்பிற்காக..!

தலைப்பாகையாக
உயிரென தமிழ் கொண்ட
ஒரு வரி கவிதை
“அம்மா”

21 August, 2012

பொத்தான் சண்டை!

எனது மடிக்கணினியில்
தொடக்கநிலை பொத்தான்களுக்கான
மூன்றாம் உலகப்போர் அரங்கேறி வருகிறது
உனது விரல்களின் வெள்ளோட்டத்திலிருந்து !

20 August, 2012

ஈரமான மடல் துளிகள்

அந்தாதியாய் வந்த மழைக்காலத்தில்
அடுத்தடுத்து நீ தந்த மடல்கள் அனைத்தும்
நீர் சொட்டிய ஓட்டைத்து வைத்திருந்தேன்
அந்தமாய் ஒரு மடலும் தந்தாய்
மஞ்சள் பூசிய அழைப்பிதழ் என்று..

ஈரமான மடல்கள் அனைத்தும்
காய்ந்துபோன இதயத்தோட்டத்தில்
மலர்களாய் பூத்திருக்கின்றன !

19 August, 2012

மறந்து விடாதே இந்த தமிழையும் ! தமிழனையும்....!

கவிதைகள் கோடி பல
வந்ததடி பெண்ணே!
வரவேற்பறை தேடி
உன் வரவினால்!

ஏனோ மௌனமது
போரின் தளபதியாக!

ஆயுதம் இல்லாமல்
ஒரு போர்
காதல்!

காதல்!
இருமனங்களின் சந்திப்பு
காதலிப்பவன்!
திருமண வாழ்வு
வென்றவன்!
மரணத்தின் வரவேற்பறை
தோற்றவன்!
உதடுகளின் களி
சுகம் தேடுபவன்!
மாற்றப்பட்டேன் நானாக
நான்!

நான்
மாற்றப்பட்டதற்கும்
மாறுபட்டதற்கும்
வழியமைத்தவள்

ஏனோ
உயிரளித்தவள்
தமிழுக்கும்! தமிழனுக்கும்!
ஆழ்கடல் தாண்டி

கடலின் ஆழம்
அறியாதவன்
உன் மௌனம் போல!

கண்ணீர் சிந்தாதே
களைந்து விடு
கவலைகளை

மறந்து விடாதே
இந்த தமிழையும்! தமிழனையும்!

18 August, 2012

காத(லால்)ல் இன்று:-

விழிகள்
விழிகளோடு..
வழிகள் மட்டும் எஞ்சி !

விழியின் மொழிகள்
விழிகளால்.!
காயங்கள்
கருப்பைக்கும்..!

வரதட்சனை புயல்
வழுவிழந்தது...!

ரெட்டை சடை
ஒற்றையாகும்..!

கைபேசிகள்
கடவுளாகின..!

எமனின்
பாசக்கயிறு..!

எதிர்வீட்டு ஜன்னலின்
தென்றல் காற்று..!

இலக்கணம் இல்லா
இலக்கிய கவிதை..!

ஆடு மேய்ப்பவனின்
ஆங்கிலம்..!

பிறந்த குழந்தையின்
முதல் புரிதல்..!
குறை மாத பிப்ரவரியில்
சுக பிரசவம்..!

கிழவன்
காகித ரோஜாவோடு..!

நடை பயணம்
ஒற்றை காலில்
மிதியடியோடு..!

காகிதத்தில்
கத்தி கப்பல்
கடலில்..!

கார்கிலில்
கண்ணீர் புகை குண்டு..!

குட்டி குரங்கின்
குல்லா கவிதை..!

17 August, 2012

என்றும் அன்புடன் பைத்தியக்காரன்!

மௌனம் களைத்த
உன் மொழிகளை மொழி பெயர்த்தது
நான் தானே; என் தமிழோடு சேர்ந்து!

கண்டிடாத....
தாவணிக்கும் கொலுசுக்கும் கூட
கோடி பல வரிகள் வார்த்ததடி
என் தமிழ்!

உன்
ஒவ்வொரு வார்த்தைகளையும்
பொன் மொழியாக அறிவித்தது
என் செம்மொழிதானே!

மொழிக்காக
வெறும் விழா மட்டுமெடுக்கும்
மடையனல்ல நான்!

மொழிகள் மற்றவற்றில்
நாட்டமில்லை என்றில்லை
தாய் மீதுள்ள அன்பு !
என் தமிழ் மீதும்!

ஏனோ உன்னால்
நீ உச்சரித்த தமிழால்
தமிழ் மீதும் பற்றாளனானேன்!

உன் மீது
என் தமிழுக்கு காதல்!
தமிழ் மீது
எனக்கு காதல்!

யார் யாரோ
பாவம் இவன்
தமிழ் பைத்தியக்காரன்
என்றபோதை விட
ஓராயிரம் எழுத்தாணி
இறங்கியதடி இதயத்தில்
தமிழ் பைத்தியக்காரன்
இவன் என்றபோது

நிஜமாகவே
நான் பைத்தியக்காரன் தான்
உன் அன்பின் மீதும்
என் தமிழ் மீதும்

என்றும் அன்புடன்
பைத்தியக்காரன் !

16 August, 2012

காதலர்கள் மாநாட்டில்!

குருதி குடித்திடும் உன் சுவாசக்காற்றின்
வெப்பத்திற்க்கு ஏங்கிடும்
என் மார்பினில் புதைந்திருக்கும்
இதய துடிப்பின் வேகம்
ஒளி மிஞ்சிடும் வேகமென
காதல் விஞ்ஞானிகள் மாநாட்டில்
ஒருமித்த கருத்துயொன்று எட்டியிருக்கிறது

15 August, 2012

அழாதே என் ராசாத்தி...

ஆத்தா களையெடுக்க போயிருக்காளோ
அய்யா ஆடு மேய்க்க போயிருக்காரோ
மாமன் மம்பட்டி பணி செய்கிறானோ
அக்கா கீரை தேடி போயிருக்காளோ
மழை பெய்த ஈரம் இன்னும் காயலையே
ராசாத்தி உன் வயிறு நிறைய
கஞ்சி வந்து இன்னும் சேரலையே !

பாவம் ஒன்னும் செய்யலையே ராசாத்தி
என் பார்வையற்ற தேசத்தில் பிறந்ததைவிட!

உனக்கொரு செய்தி சொல்ல வந்திருக்கேன்
ராசாத்தி...!
உன் செவி மட்டுமே இங்கு திறந்திருப்பதால் !

நீ தேடி வந்த
மாகாத்மா கூட கொன்றுவிட்டோம்
உன் பாதம் இங்கே படும் முன்னே !

கோவில் எல்லாம் குவிஞ்சு போச்சு
குளம் மட்டும் குட்டையா போச்சு !
மலையில கூட மரங்கள் இல்லை
தலையிலும் காகித பூக்கள் தான் !
ஆட்டு புழுக்கைய போல
அரசியல் கட்சிகள்
மக்களுக்கு வேட்டு வைக்கிறதுல
எம்.ஜி.ஆரின் எதிரி நம்பியார் போல

அகிம்சையாளன் கூட
ஆதாயம் எங்கே என்கிறான்
மொழிகளில் கலப்படம்
கட்டாயம் என்றாகிவிட்டது
நதிகளை இணைக்க நாதியில்லை
நடிகைகளை அணைக்க துடித்திடும்
நாட்டாளுபவர்கள் பலர்

நரிகளும் இங்கே காவியணிந்தபின்
ஏற்றுக்கொள்ளபடாத கடவுளும்
காணாமல் போனவர்கள் பட்டியலில்

சிறுவர் பூங்காக்கள்
சிற்றுண்டிகளாக்கப்பட்டன

குட்டி சுவற்றில் குடியிருப்போர்
எண்ணிக்கை இன்னும் இங்கே தாழவில்லை
தட்டி கேட்டோர் தளர்ந்த போக்கினால்

அகதியாய் வந்த யுவதிகளை
சகதியாய் பிளிந்து போன அதிகாரிகள் இன்னும்
ஆண்மையோடுதான் இருக்கிறார்கள்

காதல் முன்னே கள்ளம் வந்தது
காட்சி பிழைகள் ஏராளமானது

ஏட்டில் பாட்டி மருத்துவம் எழுதியென்ன
படிக்க தெர்ந்தும் படிக்காத பலர்!

செல்வியினை தட்டிகேட்டிட
கொட்டிடாத முரசு இங்கே

மனிதாபிமானமும் கற்பு இழந்துவிட்டது
கண்ணகியே வாழ்ந்திருந்தாலும்
கணவனின் சந்தேகம் சாடாமல் இருந்திருக்காது

நிழல் தேடும் பலர் இங்கே
நிழல் தர ஏனோ முன் வருவதேயில்லை

தினம் தினம் ஒரு தினம் போல
சுதந்திர தினமும் ஆயிற்றே...

முள்ளுச்செடு வளரது கண்ணே
தேசம் எட்டு திசைகளிலும்
ஆழ உழுது வித்திடுகிறேன் கண்ணே
ஆலமரமாய் வளர்ந்திடுவாயென்னி !

14 August, 2012

பசியின் சுவை!

தாத்தாவின் தவறினால்
தலைகீழாய் போன நாட்களில்
உணவுவேளையில் உண்ண வருகையில்
வாசல் அடைத்து அமீனா நிற்க்கையில்
செய்வதறியாது ஊர்பார்க்க
அழுதுகொண்டே சென்ற நேரம்
உணர்த்தியது எனக்கு
பசியின் சுவையினை !

13 August, 2012

துலாவுகின்றேன் என்னை

உன் விழித்திரை செயல்பட்டு
என் நித்திரை செயலிழந்தது !

நா கொஞ்சும் உன் தமிழை
என் செவியது கொஞ்சிகிறது !

தமிழ் இலக்கணம் மறந்து
விழி இலக்கணம் கற்றேன் !

என் கவிதையாக
வாழ்பவள் நீ!
உன்னால்
கவிஞனாக்கப்பட்டவன் நான்!

நிறைய கிறுக்கதானடி நினனத்தேன்
நித்திரையற்ற விழிகளினால்
நிதானமின்றி நிலைகுலைந்து நிற்கிறேன்!

நான் தொலைத்த நாட்களை
துலாவுகின்றேன்...
உன் விழிகளோடு !

12 August, 2012

பார் முகிலே

எழுச்சிகளும், புரட்சிகளும்
நூற்றாண்டுகளாய்
இன்றும் இரண்டாம்
பிரஜையாக

அசைவுகள் அலசப்படுகின்றன
அணிகலன்களோ ஆராயப்படுகின்றன

எழுத்துக்கள்
ஏட்டில் அன்று
கணினியில் இன்று !

புறா தூதுவிட்டோம்
மின்னஞசலில் ஒலி வேகம் மிஞ்சினோம் !

காட்டில்
பிள்ளையார் சுழியிட்டது
வீட்டிலும்
சாலை அமைக்கிறது
பயணத்தின் பாதுகாப்புகாக
பயம் வேண்டாம்
நயம் வேண்டும்

பார் முகிலே
பலவீனம் கற்றுக்கொள்
இனம் தழைக்க
வளம் செழிக்க

சலுகை அது
வாழ்க்கையல்ல !
சுயம் பேன
சுதந்திரம் வேண்டும் !

அடி மனதில் எழுதப்பட்ட
சில
எழுதப்படாத சட்டங்கள்
அழித்தொழிக்க வேண்டும்

அவள்
அவளாக வாழ
அவள் மனதில்
அவளோடான
அடிமை எண்ணம் அகற்ற வேண்டும் !

நாற்குணம் என்றும்
நற்பண்பு என்றும்
வேலிகள் போட்டுப் பெண்ணை
வீட்டுக்குள் அடைத்தோர் நாண
காக்கி உடையணிந்தும் இங்கே
நாட்டினைக் காக்கின்றார்கள்
இருந்தும்......
சீதனம் என்னும் சிறுமை இன்னும்
சீராக அழியவுமில்லை
ஆணாதிக்கமும் அடக்கு முறையும்
முற்றாக ஒழியவுமில்லை

பார் முகிலே
உனக்கு உரைக்க காரணம்
பிழை கூற இயலாது
தலை குனிந்து
நிமிர வேண்டும்
நீ..!
கல்வி கற்று
உயர்வு பெற்று நாளைய முகிலாவது
நல்ல மழை தரவேண்டி...!

11 August, 2012

என் எதிர்பார்ப்புகள் அவளிடம் - அவளோடு - அளவோடு !



கதிரவன் கண் நோக்க
கொலுசொலி வேண்டும்
வளையல்களின் பக்க வாத்தியத்தோடு..!



நாள் தழைக்க
நிலவின் தடம் வேண்டும்
நெற்றியிலே..!



காலையிலே கவிகள் வேண்டும்
பேசாத அவள்
விழிகளிரண்டில்..!


ஆயிரம் குறும்புகள் வேண்டும்
அரும்பிய அவள் மீசைக்கும்
எனக்குமிடையே..!



மாங்கல்யமிட்டு
மாலைமாற்றும் போது
கண்களில் கண்ட வெட்கம்
அவள் தாய் வீட்டுச் சீதனத்தில்
முன் வரிசையில் வேண்டும்..!


தங்கம் வெள்ளி வேண்டாம்
தமிழ் கொண்டு வா..!
தமிழன் வாழ்வு வளம் பெற..!



பொன்னகை வேண்டாமடி
புன்னகை வேண்டுமடி..!



தலையனை நண்பன் ஏங்க வேண்டும்
அவள் மடி பார்த்து..!



தினமொரு குறுஞ் சண்டை
கன்னத்தின் கிள்ளலுக்காக..!



மங்கையவள் மழலை தமிழில்
மனம் தொலைக்க வேண்டும்..!



என் இமைகள்
மூடித்திறக்க மறக்கும் நாள் வரை
காதலித்துக் கொண்டே
இருக்க வேண்டும்......!



10 August, 2012

தோழிக்கு

பற்றுதல் ஏதும்
இல்லாமல் இருந்தேன் வாழ்வில்
உன் நட்பின்
கைப்பற்றி நடக்கும் முன்பு !

எட்டி பிடிக்கும் அளவுக்கு
தொலைவில் இருந்தாலும்
தொலைபேசியின் வழியே
என் வீட்டு சமையலறை
அறிந்தவள் நீ !
உன்னோடு நான் கொண்ட
சுற்றுபயணங்கள் தான்
எத்தனை..எத்தனை !

கடும் கோடையிலும்
ரோஜா இதழ்களின் மேல்
பனித்துளி ஏனோ...!
இதுதான் உன் பிறந்தவீட்டிலிருந்து
புகுந்த வீட்டுச் சீதனமா..!

நாற்றாக நீ நடப்பட்டாலும்
களை அதன் காப்பியத்தை
எண்ணத்தாலும் எண்ணிவிடாதே..!

வரவு சொலவுகளை வரைமுறைபடுத்து
வன்முறையாக்காதே..!
வருபவன் அகிம்சையாளனாக இருக்கலாம்..!

09 August, 2012

நாட்குறிப்பின் இருப்பிடம்


எனது நாட்குறிப்பில்
உன்னை பற்றிய குறிப்புகளே இல்லை!
உனது இதயத்தின் அறைகள்
அதன் இருப்பிடம் ஆதலால்..!

08 August, 2012

இதழ் முத்தம்


ஓசையின்றி ♪ ♫ ♩ ♬
ஒரு நெடில்(நொடி) கவிதை
இதழ் கொண்டு
இதழ் தின்று !

07 August, 2012

கம்பியில்லா மின்சாரம்


விழியோடு விழி நோக்கி
இதயத்தை இயங்க செய்பவள்
நீ..!

06 August, 2012

குழந்தைகளை கொண்டாடுங்கள்

ஆதியில் ஆற்றுமணிலில் ஆரம்பித்தோம்
அடுத்ததாய் சுவடிகளில் சுவாசித்தோம்

பேசுபவர்களுக்கு மத்தியில்
வாசிக்க வாசிக்க
புத்தகமாய் போதி மரங்கள்!
இன்று புத்தகம் பொதி சுமக்கும்
புழுவாய் பிள்ளைகள் அனைத்தும்
கழுதையும் பொதி சுமக்க
கற்றது இங்கே தானோ!

கலோரி பற்றி கற்பிக்க
காலாவதியான பாடங்கள்
பெயரளவில் சத்துணவாய்
சமச்சீர் கல்வி!

புல் நுனியின் பனித்துளி பைங்கிளிகள்
பட்டாம்பூச்சி பிடிக்க தடைச்சட்டம் வந்ததோ!

மழையில் காகித கப்பல்விட
கோட்பாடுகள் கொண்டுவரப்பட்டனவோ!

கண்ணாம்பூச்சி விளையாட்டும்
கண்கள் மூடிக்கொண்டனவோ
பம்பரம்கூட விளம்பரத்தில்தான்!

விளையாட்டை பறித்துக்கொண்ட
இது என்ன விளையாட்டு!

எதிர்கால வெளிச்சத்திற்க்கொன்று
தீக்குச்சியாய் மழலைகள்

குழந்தைகள் தினம் கொண்டாடுவதை விட்டு விட்டு
குழந்தைகளை கொண்டாடுங்கள்!

05 August, 2012

மௌனம்


எனது அறையில்
நீ விட்டுச் சென்ற
முதல் பதிவு!

04 August, 2012

இதயம் உதிர்த்த இலைகள்

இமைத்திடாத உன் இதழினால்
இலையுதிர்காலம்
என் இதயத்திற்க்கும்

03 August, 2012

ஹைக்கூவான காதல்


எழுதாத கவிதை
நான்

நான் எழுதிய கவிதை
நீ

நமக்கான ஹைக்கூ
காதல்

02 August, 2012

ஈவும் மீதியும்

நான்
உன்னால் வகுக்கப்பட்டால்
ஈவு
காதலாகவும்
மீதி
மௌனமாகவும் இருக்கும்

01 August, 2012

நாட்குறிப்பு

கவிஞர்கள் கையெழுத்திட்ட
கவி புத்தகமாய்
அறையினை அழகாக்குகிறேன்

நீயோ...
உனது நாட்குறிப்பின் ஆதியில்
எனது விரல்களின் ரேகை கேட்டு
கவிதையே உன் காலச்சுவடுகளில்
கவினாக்கிவிட்டாய்...!