அன்புடன் வரவேற்கிறேன்

நண்பர்களே ! உங்கள் அனைவருக்கும் வணக்கம். என் கவிதைகள் உங்களின் வாசிப்பிற்கு தவம் இருக்கின்றன. ஆம் நீங்கள் வாசிக்கத் துவங்கினால் என் கவிதைகள் சுவாசிக்கத் துவங்கும்... நன்றி...

27 December, 2012

மௌனங்கள் உயிர்த்தெழுந்தால் ♥ பகுதி 3



அனைத்துவகை மிட்டாய்களையும்
ஊருக்கே வாங்கி வருகிறேன்
எனக்காய் உள்ளங்கையில் ஒளித்து வைத்திருக்கும்
ஆரஞ்சுமிட்டாய் போதும் எனக்கு !



நீ துணி காயப்போட வரும் நேரத்திற்க்காக
நான் பசுமை புரட்சியாளனாக மாறிவிட்டேன்
மச்சு முழுவதும் உன் அழகை மெச்சும்
செடிகள் வளர்கின்றேன் !



அடுத்து என்ன பட்டம் வேண்டி
படிக்க போகிறாய் என்றேன்
மாலை அணிவித்து நீ தரும்
திருமதி பட்டம் என்றாய்
நானும் வெட்கம் கொண்ட நேரமது !



அம்மா வைக்கும் புளிக்குழம்பு போல
உன் விரலில் வரிசையாய் மாட்டி தின்னும்
அப்பளப்பூவும் எனக்கு பிடித்த உணவாய்போனது !



ஐந்து வயதில் ஆலமரத்தில்
ஊஞ்சல் கட்டியது நினைவிருக்கிறது என்றேன்
அவசரப்படாதே தொட்டில் கட்ட
மாதங்கள் உண்டு தள்ளியே இரு என்கிறாய் !



தேர்வுக்கு முதல் நாள் அம்மாவிடம்
ஆசி வாங்க வருவாய்
எல்லாவற்றிலும் நீ தேர்ச்சி பெறுவாய்
அம்மா வேறெதுவும் அர்த்தமின்றி
உன்னை வாழ்த்துவதுண்டு !
நீ படிக்க பணம் தடையானது
அவள் படிக்க நீ தடையாகி விடக்கூடாதென்று
என்னோடு கோபத்தில் கூறுவதாய்
முகபாவனை செய்வதுண்டு
என்னதான் இருந்தாலும் அம்மா அம்மாதான் !



தேர்வு எழுதுகிறோம்
ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நீயும்
வருடத்திற்க்கு ஒருமுறை நானும் !
நீ வெற்றி பெறுவது ஊரறிந்த உண்மை
நான் வெற்றி பெறுவது உன் தந்தைக்கு
மட்டுமே தெரிந்த உண்மை !



எத்தனை தீபாவளிதான்
தாவணியில் தரிசிக்க என்பேன்
நாளையே மாலையிடு
பொங்களுக்கு பட்டுகட்டி
காட்சி தருகிறேன் என்கிறாய்
தாவணி தேவதை சேலைகட்டி
என் முற்றத்தில் பொங்கலிட
உனக்கு போட்டியாய் என்னை துரத்தியவர்கள்
பெரும் மூச்சுவிட கண் விழிக்கும் கதிரவன்
என்னோடு கண் சிமிட்டுகிறான்
நேற்றைய கனவது..!



நான் வாங்கிவரும் சேலையினை
கட்டிவிட்டு திரும்ப தருகிறாய்
முத்தங்களை மட்டும்
வீட்டுக்கு எடுத்துச் செல்கிறாய் !



முப்பதே நாட்களில் காதல்மொழி பேசலாம்
எனது விடுமுறை குறித்து
ஊர் தண்ணீர் தொட்டியில்
நண்பன் எழுதிய வாசகம் !



No comments: